Published : 14 Apr 2014 09:35 PM
Last Updated : 14 Apr 2014 09:35 PM

அம்பேத்கர் வழியில் அமைந்தது எங்கள் கூட்டணி: விஜயகாந்த்

சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டு, அம்பேத்கர் வழியில் தான் தங்கள் கூட்டணி அமைந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜயகாந்த் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, "சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்தான் அம்பேத்கர். ஊழல், கொலை இல்லாத நாட்டுக்காக அவர் போராடினார். அம்பேத்கர் வழியின் அடிப்படையில்தான் எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. நான் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்கிறேன்.

உடல் நலக் குறைவால், நான் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை. மீண்டும் 4 நாட்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பிரச்சாரம் செய்வேன்.

இந்தியாவில் ஊழலற்ற, நியாயமான ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்றார் விஜயகாந்த்.

இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து சேலம் மாவட்டம் கருமந்துறையில் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசும்போது, "பிரியங்கா காந்தியின் கணவர் செய்துள்ள ஊழலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் மிகவும் மோசமான ஆட்சியை காங்கிரஸ் செய்துள்ளது.

ஜெயலலிதா பிரச்சாரத்தில் கருணாநிதியை குறை கூறி பேசி வருகிறார். அவர்களின் தொலைக்காட்சியில் என்னை கேவலப்படுத்துகின்றனர். எனது கட்சியை ஒழிக்க பார்க்கின்றனர். அது முடியாது.

மின்சாரத்தை யாரோ திருடுகிறார்கள் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். இதையெல்லாம் வரும் 24-ம் தேதி வரை கூறுவார்கள். அதன்பின், மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறுவார்.

மோடி பிரதமரானால் உடனடியாக தண்ணீர், மின்சார பிரச்சினையை முடித்துக் கொடுப்போம். மலைவாழ் மக்களுக்கு பட்டா, ஜாதி சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வோம்" என்றார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x