Published : 04 Apr 2014 01:19 PM
Last Updated : 04 Apr 2014 01:19 PM

மீண்டும் பாஜகவில் சேர்ந்தார் காங்கிரஸ் வேட்பாளர் தோமர்: 2 வேட்பாளர் கட்சி தாவியதால் மேலிடம் அதிர்ச்சி

தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத்தர் நகர் (நொய்டா) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சந்த் தோமர் (64) வியாழக்கிழமை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

இவருடன் சேர்த்து 2 வேட்பாளர்கள் பாஜகவுக்கு தாவியதால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாகிரத் பிரசாத் அறிவிக்கப்பட்டார். மறுதினமே அவர் பாஜகவில் இணைந்தார்.

கவுதம் புத்தர் தொகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தோமரும் பாஜக சார்பில் பிரபல மருத்துவமனை உரிமையாளர் மகேஷ் சர்மாவும் போட்டியிடுகின்றனர். இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் தோமர், வியாழக்கிழமை காலை பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீண்டகாலமாக பாஜகவில் இருந்து வந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ச்சிவசப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தேன். இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. அவரால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தை தர முடியும். எனவே, அவரது வெற்றிக்காக பாடுபடுவேன்" என்றார்.

காங்கிரஸ் கட்சி மதவாதத்தைத் தூண்டுவதாலும் பிரிவினை அரசியலை ஊக்குவிப்பதாலும் அக்கட்சியிலிருந்து விலகியதாக தோமர் குற்றம் சாட்டி உள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசித் தேதி முடிந்து, தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், கடைசி நேரத்தில் தோமர் பாஜகவுக்கு திரும்பியது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தோமர் உ.பி.யின் காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2004-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

இதையடுத்து, 2009 தேர்தலில் இந்தத் தொகுதி ராஜ்நாத் சிங்குக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த தோமருக்கு கடந்த தேர்தலில் கவுதம் புத்தர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் தோல்வி அடைந்தார். மீண்டும் அவருக்கு அதே தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x