Published : 14 Apr 2014 09:06 AM
Last Updated : 14 Apr 2014 09:06 AM

சென்னையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு: வீடு வீடாக விநியோகம் செய்ய ஏற்பாடு

நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்கள் வாக்களிக்கும் விதமாகப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை சென்னையில் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

2014க்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது இந்தியத் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு சனிக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

இந்த வாக்காளர் சீட்டானது உரிய பதிவு செய்யப்பட்ட வாக்காளர் வசமோ அல்லது அவ்வாக்காளரின் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினரிடமோ வழங்கப்படும். அவ்வாறு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங் கப்பட்டதற்கு அத்தாட்சியாகப் பெற்றுக் கொள்பவரின் கையொப்பம் அல்லது வலதுகை பெருவிரல் ரேகை உரிய பதிவேட்டில் பெறப்படும்.

தேர்தல் நிலை அதிகாரி வாக்குச்சீட்டினை விநியோகம் செய்யும்போது அரசியல் கட்சிகள் உறுப்பினர்கள், வேட்பாளரின் முகவர்கள் வாக்குசீட்டு உண்மை யான நபரிடம் விநியோகம் செய்வதை உறுதி செய்து கொள்ள அதிகாரியுடன் செல்லலாம்.

வாக்காளர் சீட்டுகளை அசலில் மட்டுமே விநியோகம் செய்யவும், எக்காரணத்தைக் கொண்டும் பொது மக்களுக்கு வாக்குச் சீட்டின் ஒளி நகல்களை வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் அதை அசலாகப் பெற்றுக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாக்கு சாவடி நிலை அலுவலரோ அல்லது வேறு எவருமோ மொத்தமாக வாக்காளர் சீட்டினை விநியோகம் செய்யக் கூடாது.

இந்த விதிமீறல்களுக்கு எதிராகச் செயல்படும் நபர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் உரிய பிரிவுகளை மீறியதாகக் கருதி, சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல்

சென்னை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதியிலுள்ள மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் பட்டியல் வியாழக்கிழமை இறுதியானது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளனவா என்று மக்கள் தெரிந்து கொள்வதற்காக அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இதை சரிபார்த்து கொள்ளலாம். அது தவிர இணையதளத்திலும் தொகுதிவாரியாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x