Published : 13 Apr 2014 11:08 AM
Last Updated : 13 Apr 2014 11:08 AM

சுதந்திர இந்தியாவில் ஊழல் மிகுந்தது மன்மோகன்சிங் அரசு: வடசென்னை பிரச்சாரக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இதுவரை அமைந்த அரசுகளிலேயே மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் மிகப் பெரும் ஊழல் புரிந்த அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

வடசென்னை தொகுதி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியை ஆதரித்து சென்னை தண்டையார்பேட்டை ஆர்.கே. நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காரத் பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை தொடர்ந்து உயர்த்தியதே விலைவாசி உயர்வுக்குக் காரணம்.

காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்த வளர்ச்சியால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. பட்டதாரிகளில் 3ல் 2 பேர் வேலையில்லாமல் உள்ளனர். அந்த வேலையும் சொற்ப வருமானத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே உள்ளனர். வேலைக்கு உத்தரவாதமோ, சமூகப் பாதுகாப்போ அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

10 ஆண்டு கால காங்கிரஸ் அரசில் பெரு முதலாளிகளும், பெருந்தொழில் நிறுவனங்களும்தான் லாபமடைந்துள்ளன. வரிச் சலுகை என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 21 லட்சம் கோடி அளவுக்கு அவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாறாக, சாதாரண மக்கள் பயன்படுத்தும் உணவு, உர மானியத்தை பெருமளவு குறைத்து விட்டார்கள். ஆக சுதந்திரத்துக்குப் பின் அமைந்த மத்திய அரசுகளிலேயே மன்மோகன்சிங் தலைமையினான அரசைப் போல் ஊழல் செய்த அரசு வேறெதுவும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆயிரக்கணக்கான சிறுபான்மை யின மக்கள் படுகொலை செய்யப் பட்ட மாநிலம் குஜராத். அங்கு இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர் களும் மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ஆக இந்த மாதிரி முன்மாதிரிதான் இந்தியா வுக்கு வேண்டுமா? பொருளாதார கொள்கைகளில்கூட காங்கிரஸுக்கு மாற்றாக எந்தக் கொள்கையும் முன்வைக்காத பாஜகவை முறிய டித்து மக்கள் நலன் சார்ந்த கொள்கை களை முன்வைக்கும் இடதுசாரிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சி யின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x