Published : 25 Apr 2014 10:35 AM
Last Updated : 25 Apr 2014 10:35 AM

முதல் முறை வாக்களித்தது ‘த்ரில்லிங்’ கலந்த சந்தோஷம்: இளம் தலைமுறையினர் உற்சாகம்

முதல்முறை வாக்களித்தது மிகவும் த்ரில்லிங்காக, சந்தோஷமாக இருந்ததாக இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஓட்டு போடாமல் இருந்தவர் கள்கூட இந்த ஆண்டில் அதிக விழிப்புணர்வு காரணமாக முதல் முறையாக ஓட்டு போட்டதாக பலரும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வியாழக்கிழமை நடந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காலை ஏழு மணி முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.குறிப்பாக இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும் மிகவும் சந்தோஷத்துடன் திருவிழாவுக்கு வந்தது போல் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

‘என் ஓட்டு என் உரிமை’

இளம் வயதினர், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்க ளிக்க வந்திருந்தனர். பெரும்பாலும் முதல் முறை வாக்காளர்கள் அனைவருமே தாங்கள் வாக்குப்பதிவு செய்ததை, பெரிய சாதனையைப் போல் நினைத்து சந்தோஷப் பட்டனர். ‘நம் நாட்டின் நிர்வாகத்தை நிர்ணயிக்கும் உரிமை எனக்கும் கிடைத்து விட்டது’ என்று பலர் பெருமையாகப் பேசிக்கொண்டனர்.

சென்னை டி.டி.கே.சாலை செயின்ட் பிரான்சிஸ் பள்ளி வாக்குச்சாவடியில், வாக்க ளித்துவிட்டு வந்த முதல்முறை வாக்காளர்கள் யுவராஜ், கோமதி ஆகியோர் தங்களது பெற்றோருடன், தாங்கள் வாக்களித்ததை சந்தோஷமாக பகிர்ந்து கொண்டனர்.

‘ஓட்டு போடுவதில் பெருமை’

அப்போது யுவராஜ் கூறும்போது, ‘‘எனக்கு 23 வயது. கடந்த முறை தேர்தலில், நான் விண்ணப்பித்தும் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. இந்த முறை வந்துவிட்டது. வாக்களித்ததை எனக்கு கிடைத்த உரிமையாகக் கருதுகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார்.

அவரது சகோதரி கோமதி கூறும்போது, ‘‘ஓட்டு போடுவது எனக்கும் இது முதல்முறை. வாக்களிக்கும் வாய்ப்பை பெருமையாக நினைக்கிறேன்’’ என்றார்.

பீமண்ணா கார்டன், மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் வாக்களித்துவிட்டு வந்த பூர்வீகா, தனது தந்தை மற்றும் சகோதரருடன் முதல்முறையாக வாக்களித்தார். அவர் கூறும்போது, ‘‘வாக்குச்சாவடிக்குள் நுழையும் போது மிகவும் த்ரில்லாக இருந்தது. வாக்க ளிக்கும் வரை அந்த த்ரில்லிங் தொடர்ந்தது. வாக்களித்த பிறகு ஒரு நிம்மதியான, சந்தோஷமான உணர்வு ஏற்பட்டது’’ என்றார்.

முதல்முறை வாக்காளர்களில் இளம் வயதினர் மட்டுமின்றி, நடுத்தர மற்றும் முதிய வயது கொண்டவர்களும் அடங்குவர். இவர்கள் இப்போதுதான் முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலரது பெயர்கள் இப்போதுதான் முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பலர், பெயர் இருந்தும் இதுவரை வாக்களிக்காமல் இருந்தவர்கள். அவர்களும் முதல் முறையாக ஓட்டு போட்டனர்.

விழிப்புணர்வு அதிகரிப்பு

தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தன் கணவருடன் வந்து வாக்களித்த விஜயலட்சுமி என்பவர் கூறும்போது, ‘‘ஒருவழியாக 40 வயதில்தான் ஓட்டு போட்டிருக்கிறேன். ஏற்கெனவே எனக்கு வாக்குரிமை உண்டு. ஆனாலும், ஓட்டு போடுவதில் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.

நண்பர்கள், குடும்பத்தினர் அடிக்கடி தேர்தல் சம்பந்தமாக பேசிக் கொண்டதால், இந்த முறை நானும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன். முதல்முறையாக ஓட்டு போட்டவர்களை பரவலாக பல தொகுதிகளிலும் அதிக அளவில் காண முடிந்தது. ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x