Published : 23 Apr 2014 06:55 PM
Last Updated : 23 Apr 2014 06:55 PM

ராகுல், மோடியை சாடிய பின்னர் வாரணாசியில் கேஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல்

ராகுல் காந்தி, நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பின்னர், வாராணாசி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்தபடி, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியது:

"நான் இங்கு இருப்பவர்கள் அனைவரையும் கேட்கிறேன்... இங்கிருக்கும் விளம்பரp பலகைகளுக்கு செலவு செய்ய மோடிக்கும் ராகுலுக்கும் எங்கிருந்து பணம் வருகிறது?

தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி ரூ.5000 கோடியும், ராகுல் காந்தி ரூ.1000 கோடியும் செலவு செய்துள்ளனர். வாரணாசியில் உள்ள மோடியின் உயர்ந்த விளம்பர பலகையை பாருங்கள். என்னையும் பாருங்கள். எனது சட்டைப் பையில் ரூ.500 மட்டுமே உள்ளது.

இங்கு நான் மிகவும் எளிமையாக, என்னுடைய பழைய ஜீப் மூலம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளேன். ஆனால், நாளை பாருங்கள். மோடி ஹெலிகாப்டரில் பறந்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்வார்.

கடந்த சில நாட்களாக காசி மக்களுடன் தங்கி இருந்ததில், அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டேன். மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காந்தி குடும்பத்திற்கு வாக்களித்து எந்த பயனையும் பெறவில்லை. நான் வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். எனக்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை.

ஊழலுக்கு எதிரான வாரணாசி தொகுதி மக்களின் போராட்டம் இது. அமேதியில் மக்கள் ஏமாற்றப்படுவது போல் வாரணாசியிலும் நடைபெற கூடாது. வாரணாசி மக்கள் இந்த முறை அவர்களுக்கு தொடர்புடைய மக்களை தேர்வு செய்ய வேண்டும்" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள வாரணாசி தொகுதியில், உள்ளூர் செல்வாக்கு மிகுந்தவரான அஜய் ராயை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x