Published : 22 Apr 2014 08:11 AM
Last Updated : 22 Apr 2014 08:11 AM

உதகையில் ஆ.ராசா அலுவலகத்தில் பறக்கும் படை திடீர் சோதனை

திமுக. வேட்பாளர் ஆ.ராசாவின் உதகை அலு வலகத்தில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராசா, மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் மேட்டுப்பாளையம் சென்றுவிட்டார்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நீலகிரி தொகுதி தேர்தல் பார்வையாளர் ராகுல்குமார் பர்வார் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர் எஸ்தர் சாந்தி மற்றும் காவல்துறையினர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் சோதனையிட்டனர். அலுவலகத்தின் பின்புறம் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. சுமார் 20 நிமிடங்கள் இந்த சோதனை நீடித்தது.

பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும்வரை தேர்தல் பார்வையாளர் ராகுல்குமார் பர்வார், ராசாவின் எம்.பி. அலுவலகத்துக்கு வெளியே காரில் அமர்ந்து கவனித்தார். அவர் அலுவலகத்துக்குள் செல்லவில்லை.

பறக்கும்படை வட்டாட்சியர் எஸ்தர் சாந்தி கூறுகையில், திமுக. வேட்பாளர் ராசாவின் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் பொ.சங்கரின் உத்தரவின் பேரில், தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் ராசாவின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டோம்.

இச்சோதனையின்போது, பணமோ அல்லது பரிசு பொருட்களோ கைப்பற்றப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x