Published : 09 Apr 2014 12:00 AM
Last Updated : 09 Apr 2014 12:00 AM

காங்கிரஸின் ஆதரவை தேடி பல கட்சிகள் அணிவகுக்கும்: அபிஷேக் சிங்வி

தேர்தலுக்குப் பிறகு திமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸ் அலுவலகத்தை தேடி அணிவகுத்து நிற்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

இந்தத் தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அலை அடிப்பதாக சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் நாடு முழுவதும் பார்த்து விட்டோம். அப்படி எந்தவொரு அலையையும் காணவில்லை. அலை அடிக்கிறது என்றால், அதில்தானே பாஜக போட்டியிட வேண்டும். தேமுதிக, பாமக போன்ற மாநிலக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளாக இருக்கும் தொழிலதிபர்களின் முதுகில் சவாரி செய்வதைப் போன்று கூட்டணி வைத்தது ஏன்?

தமிழகத்திலுள்ள ஒரு தலைவர், காங்கிரஸ் கட்சி நன்றி இல்லாமல் நடந்து கொண்டதாகக் கூறுகிறார். நாங்கள் யாருக்கும் நன்றி கெட்டவர்களாக இருந்ததில்லை. கூட்டணியில் இருந்தபோது எந்தக் கட்சிகளையும் இடையூறு செய்யவில்லை.

தமிழகத்தில் பாலங்கள் கட்டுவது, மெட்ரோ ரயில், ஜவஹர்லால் நேரு நகரமைப்புத் திட்டம் போன்றவற்றுக்கு அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பல திட்டங்களை, சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொண்டுள்ளது. இதையெல்லாம் மறைத்து விட்டு, மக்களை யாரும் முட்டாளாக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு, இந்தத் தேர்தலில் தனித்து நிற்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தேர்வில் எந்த குளறுபடிகளும் நடக்க வில்லை.

எத்தனை இடங்களில் காங் கிரஸ் வெற்றிபெறும் என்று சொல்வதற்கு நான் ஜோசியக் காரனோ, மந்திரவாதியோ அல்ல.

தேர்தல் முடிந்த பிறகு பாருங்கள். எங்களை விமர்சனம் செய்தவர்கள், நன்றி கெட்டவர்கள் எனக் கூறிய பல கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் ஆதரவைத் தேடி வரும்.

பாஜக தேர்தல் அறிக்கை ஒரு பயனில்லாத காகிதம். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவது, ராமர் கோயில் கட்டுவது மற்றும் பொது சிவில் சட்டம் இந்த மூன்றை வைத்துதான் அவர்கள் அரசியல் செய்கின்றனர்.

இந்தியாவில் மூன்றாவது அணி, நான்காவது அணிக்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் வந்தபோது, பிராந்திய நாடுகள் நலன் கருதி இந்தியா ஒதுங்கி நின்றது.

இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x