Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

நீலகிரி பாஜக வேட்பாளர் மனு தள்ளுபடி: மாற்று வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தி, மாற்று வேட்பாளர் அன்பரசன் உள்பட 6 பேரின் மனுக்கள் திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.

நீலகிரி தொகுதியில் போட்டியிட ஆ.ராசா (திமுக), சி.கோபாலகிருஷ்ணன், மாற்று வேட்பாளராக ராம்குமார் (இருவரும் அதிமுக), பி.காந்தி (காங்கிரஸ்), எஸ்.குருமூர்த்தி, மாற்று வேட்பாளராக அன்பரசன் (பாஜக), ராணி, மாற்று வேட்பாளராக ரமேஷ்பாபு (ஆம் ஆத்மி) மற்றும் சுயேச்சைகள் உள்பட 16 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பொ.சங்கர், தேர்தல் பார்வையாளர் ராகுல்குமார் புருவார் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தி உள்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கட்சியின் அங்கீகாரப் படிவங்களை உரிய காலத்தில் பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தி சமர்ப்பிக்கவில்லை என்றும் அவருக்கு மாற்றாக வேட்புமனு தாக்கல் செய்த அன்பரசுவின் மனுவை 10 பேர் முன்மொழியவில்லை எனக் கூறியும் இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேல்முறையீடு

5-ம் தேதி மாலை 3 மணிக்குள் கட்சியின் அங்கீகாரப் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், வாகனத்தில் ஏற்பட்ட பழுதால் அரை மணி நேரம் தாமதமாக படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதை பரிசீலிக்காமல் வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

இதுபோன்ற சிறு விஷயங்களுக்காக மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி மனுவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தினோம். வேண்டுமென்றே மனுவை ஆட்சியர் தள்ளுபடி செய்துள்ளார். இதுதொடர்பாக மேல் முறையீடு செய்யப்போவதாக பாஜக மாநில துணைத் தலைவர் டி.திருமலைசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், கட்சியின் அங்கீகாரப் படிவங்களை, பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தி சமர்ப்பிக்கவில்லை. அவரது மாற்று வேட்பாளரின் மனுவை 10 பேர் முன்மொழியவில்லை. இதனால், இருவரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதேபோல், இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி வேட்பாளர் முருகன், ஆம் ஆத்மி மாற்று வேட்பாளர் ரமேஷ் பாபு, அதிமுக மாற்று வேட்பாளர் ராம்குமார் ஆகியோரின் மனுவை 10 பேர் முன்மொழியாததால் இவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆம் ஆத்மி வேட்பாளர் ராணி, மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் பழைய சாதி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததால், புதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க மாலை 5 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x