பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? - அமைச்சர் ராஜ்மோகன் பதில்

பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? - அமைச்சர் ராஜ்மோகன் பதில்
Updated on
3 min read

சென்னை: பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் என்று தெரிவித்தார்.

தலைமைச் செயலத்தில் அமைச்சர் ராஜ்மோகனிடம் ‘தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

பிஎம்ஸ்ரீ திட்டம் பின்புலம்

மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது. இதன்​மூலம் பள்​ளி​களின் கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்தப்பட்டு வரு​கின்​றன. ஆனால், இந்த திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை இருப்​ப​தால் தமிழகம் இணைய மறுத்​து​விட்​டது. இதன் காரண​மாக, ஒருங்​கிணைந்த பள்​ளிக் ​கல்​வித் திட்​டம் மூல​மாக தமிழகத்​துக்கு தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் மத்​திய அரசு நிறுத்தி வைத்​தது.

இந்த விவ​காரம் கடந்த திமுக ஆட்​சி​யில் பெரும் சர்ச்​சை​யானது. இதன் தொடர்ச்சியாக, மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்​டும் ஒரு கடிதம் எழு​தி​யுள்​ளது. பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவெக தலை​மை​யில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்​திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்​பியது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவ​காரத்​தில் தவெக என்ன முடி​வெடுக்​கும், முந்​தைய திமுக அரசு ​போல எதிர்ப்பு தெரிவிக்​குமா அல்​லது ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​மா, நிறுத்தி வைக்​கப்​பட்ட கல்விக்​கான நிதியை மத்​திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரி​யான நடவடிக்கை எடுக்​கும் என பல கேள்வி​கள் எழுந்​துள்​ளன. இந்தப் பின்னணியில்தான் “இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தரமோகன் மற்றும் கல்வி உயர் அலுவலர்களோடு பள்ளிக் கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்களை வெளியிட்டார்கள். மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மைய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடல்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், மாணவர்களது உடல் இயக்க திறன்கள் (Motor skills), சமூக மனவெழுச்சித் திறன்கள், விழுமியங்கள், வாழ்க்கை திறன்களை உள்ளடக்கிய பாடப்பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2026 – 27 கல்வி ஆண்டில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பின் 1.06.2026 திங்கள்கிழமையன்று திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.

பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்ப்பட்டு தயார்நிலையில் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்தக் கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும் எனவும் அறிவித்தார். பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.

2026-27-ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் (பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) மாணவர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற/ பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அவற்றினை அப்புறப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks), கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

2025-26ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் முறையே ஆறாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும். மேற்காண் அறிவுரைகளை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் பின்பற்றுமாறு தெரிவித்தார். மேலும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? - அமைச்சர் ராஜ்மோகன் பதில்
“பெரியார் மண் என்றாலும் இங்கே தலித் முதல்வராக முடியாது” - மனம் திறந்த திருமாவளவன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in