மலைவாழ் மக்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய அரசு பள்ளிகள் ‘உண்டு உறைவிட பள்ளிகள்’ ஆக மாற்றப்படுமா?

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மலைக்கிராம பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை சீரற்றதாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் உள்ள பள்ளிகளை உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களுக்கு உட்பட்டு திருமூர்த்திமலை, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, ஈசல் திட்டு, கோடந்தூர், தளிஞ்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் கல்வி பயில தளிஞ்சி, கோடந்தூர், மாவடப்பு, குருமலை, குழிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள் அனைத்தும் வன விலங்குகள் நடமாட்டம் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால், உடுமலை போன்ற நகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆசிரியர்கள் காலையில் சென்று மாலையில் திரும்புவதற்கு ஏற்ற சரியான பாதை வசதியோ அல்லது போக்குவரத்து வசதியோ இல்லை.

பதவி உயர்வு உள்ளிட்ட அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக ஆசிரியர்கள் பலர் இப்பள்ளிகளுக்கு விரும்பி பணியிட மாறுதல் பெற்று வருகின்றனர். ஆனால், போக்குவரத்து சவால்களைக் காரணம் காட்டி அவர்கள் முறையாகப் பள்ளிகளுக்கு வருவதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சட்டப்பூர்வ ஆய்வுகளைத் தவிர்க்க பதிவேடுகளில் மட்டும் மாணவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, வகுப்பறைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அவலநிலை நீடிக்கிறது.

கல்வி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வருவதில்லை என்றும், மக்கள் பிரதிநிதிகள் இதைக் கண்டுகொள்வதில்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேல்நிலைக் கல்வி பாதிப்பு 5-ம் வகுப்பிற்கு பிறகு மேல்நிலைக் கல்வி பயில நகரப் பகுதிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால், பாதுகாப்பு அச்சம் காரணமாக பெரும்பாலான பெற்றோர் தம் பிள்ளைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை, மேற்படிப்புக்கு அனுப்புவதில்லை.

ஒரு சிலர் மட்டுமே விடுதிகளில் தங்க வைத்துப் படிக்க வைக்கின்றனர். இச்சிக்கலுக்குத் தீர்வாக, மலைக்கிராமங்களில் இயங்கும் அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்தையும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதன் மூலம் ஆசிரியர்கள் அங்கேயே தங்கிப் பணியாற்றும் நிலை உருவாகி, கல்வியின் தரமும் உயரும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசுகளிடம் இக்கோரிக்கையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதிய அரசாவது தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
ஒட்டன்சத்திரத்தில் வீட்டை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in