காமராஜர் பிறந்த நாள்: ஏன் கல்வி வளர்ச்சி நாள்?

காமராஜர் பிறந்த நாள்: ஏன் கல்வி வளர்ச்சி நாள்?
Updated on
1 min read

காமராஜரின் பிறந்த நாள் ‘கல்வி வளர்ச்சி நாளா’க இன்று கொண்டாடப்படுகிறது. எல்லாரும் படித்துவிட்டால், வேலைக்கு எங்கே போவது என்று கேட்டவர்கள் இருந்த காலக்கட்டத்தில், கல்விப் புரட்சியை நிகழ்த்தியவர் காமராஜர்.

1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதலமைச்சராக காமராஜர் நீடித்த காலக்கட்டத்தில், தமிழகத்தில் கல்வித்துறையில் தனிக் கவனம் செலுத்தினார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் மூன்று மைல் தொலைவில் ஒரு நடுநிலைப் பள்ளி, 5 மைல் தொலைவில் ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் திறக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.

1954இல் 14 ஆயிரமாக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1957இல் 15,800 ஆக அதிகரித்தது. 1951இல் 637 என்கிற அளவில்தான் உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. அந்த எண்ணிக்கை 1962இல் 1,995 ஆக உயர்ந்தது. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1952இல் 3.33 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 1962இல் 9 லட்சமாக உயர்ந்தது.

எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினால் நாடு முன்னேறும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்த தலைவர் காமராஜர். கட்டாய இலவசக் கல்வி வழங்கக் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளையும் செயல்படுத்தினார்.

அரசுப் பள்ளிகளை மட்டும் கவனிக்காமல் தனியார் பள்ளிகளையும் ஊக்குவித்தார். ‘பள்ளி வளர்ச்சித் திட்டம்’ என்கிற பெயரில் பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களைப் பெற வழிவகுத்தார்.

முத்தாய்ப்பாக ‘இலவச மதிய உணவுத் திட்ட’த்தைக் கொண்டுவந்து, ஏழைக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்வதை உறுதி செய்தார் காமராஜர். தொடக்கக் கல்வியிலும் உயர்நிலைக் கல்வியிலும் கவனம் செலுத்திய காமராஜர், கலைக் கல்லூரிகளையும் தோற்று வித்தார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகளையும் தொடங்கிவைத்தார். கல்விக்கெனப் புரட்சிகரமான திட்டங்கள் பல கொண்டு வந்த காமராஜர் பிறந்த நாளான ஜுலை 15, 2006இல் ‘கல்வி வளர்ச்சி நாள்’ ஆக அறிவிக்கப்பட்டு.

இது 20ஆம் ஆண்டு. காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம், இலவசக் கல்வி, புதிய பள்ளிகள், பள்ளிகளில் சீருடை, ஆசிரியர் நலன், கல்வி நிறுவனங்கள் செயல்படும் நாள்கள் அதிகரிப்பு போன்றவை முக்கியமானவை.

இவை எல்லாம் அவர் மேற்கொண்ட கல்விச் சீர்திருத்தத்தினால் விளைந்தவை. அதன் விளைவாக எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இவற்றை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும்தான் கல்வி வளர்ச்சி நாளின் நோக்கம்.

காமராஜர் பிறந்த நாள்: ஏன் கல்வி வளர்ச்சி நாள்?
Good Luck to You, Leo Grande: பேரிளம் பெண்ணின் காமமும், நான்சிக்கு கிட்டிய புரிதலும் | திரை தேவதைகள் 26

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in