

இரட்டை பட்டப்படிப்பு மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்ற விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர்.
வேலூர்: அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் விஐடி பல்கலைக்கழகம் இரட்டை பட்டப்படிப்பு மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் பினாய காந்த பிரதான் தலைமையில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்கள், உலகளாவிய ஒருங்கிணைப்பு துறை டீன்செனட்டர் சுலைமன் கச்சானி ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் இந்திய பல்கலைக்கழகம் விஐடி என்பது குறிப்பிடத் தக்கது.
இதுகுறித்து, விஐடி நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் கூறியதாவது: இது விஐடி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடையிலான ஒரு மைல்கல் ஒப்பந்தமாகும். உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றுடன் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்தை வழங்கும் முதல் இந்திய பல்கலைக்கழகம் என்ற சிறப்பை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
உலக தரத்துக்கேற்ற கல்வியை வழங்குவதிலும், மாணவர்களுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் சர்வதேச கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் விஐடி கொண்டுள்ள தளராத அர்ப்பணிப்பையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் சர்வதேச உறவுகள் இயக்குநர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.