

விஐடி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் ராமசாமி, விஐடி நிறுவனர், வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் ஆகியோர் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். படம்: எம்.முத்துகணேஷ்
மேலக்கோட்டையூர்: விஐடி சென்னையின் 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளர் டி.ராமசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதீஸ்வரன், பென்னட் கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மோஹித் ஜெயின் ஆகியோர் சிறப்பு மற்றும் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் 41 மாணவ, மாணவிகளுக்குத் தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 4,518 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், தலைமை விருந்தினர் ராமசாமி பேசியதாவது: இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 740 பொறியியல் மாணவர்கள் மட்டுமே பட்டம் பெற்றனர். இன்று மாநிலத்தில் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர்.
2000-ம் ஆண்டு முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இது ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையின் மூலம் தெரியவருகிறது.
உலக இளைஞர் தொகையில் 29 சதவீதம் பேர் இந்திய இளைஞர்கள், ஒரு புதிய உலகத்தை வடிவமைப்பதற்கான போதுமான ஆற்றலும் திறனும், உலகை மாற்றுவதற்கான நம்பிக்கையும் இந்திய இளைஞர்களிடம் உள்ளது. குறிப்பாக, இந்திய இளைஞர்களிடம் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நீடித்த வளர்ச்சியுடன் இணைப்பதற்கான தெளிவும் திறன்களும் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள், பட்டம் பெறும் மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இந்தியா ஒரு வளரும் நாடு, கல்வியின் வளர்ச்சி நாம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இல்லை. கனடாவில் தகுதியுள்ள இளைஞர்களில் 64 சதவீதம் பேர் பட்டதாரிகளாக உள்ளனர். அதே நேரத்தில், தென் கொரியா மற்றும் ஜப்பானில் இந்த விகிதம் சுமார் 53 சதவீதமாக உள்ளது.
இன்றைய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதிலும் முக்கிய பங்காற்றுவார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகள் உயர்கல்வி மீது அதிக கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்வதை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.
விழாவில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் நன்றியுரை வழங்கினார். விஐடி வேலூரின் இணைத் துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், விஐடி சென்னை இணைத் துணைவேந்தர் த.தியாகராஜன், இயக்குநர் கே.சத்தியநாராயணன், விஐடி பதிவாளர் ஜெயபாரதி மற்றும் விஐடி சென்னையின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.