நெல்லையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்த 3 சகோதரர்கள்

அரசுப் பள்ளியில் படித்து வென்று காட்டிய நெசவாளரின் மகன்கள்
சகோதரர்கள் அருண், தரண், வெங்கட் ஸ்ரீ

சகோதரர்கள் அருண், தரண், வெங்கட் ஸ்ரீ

Updated on
1 min read

திருநெல்வேலி: அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 3 சகோதரர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் ராம்குமார் (49). அவரது மனைவி மங்கையர் திலகம். இந்தத் தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் என 3 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் அருண் மற்றும் தரண் ஆகியோர் இரட்டை சகோதரர்கள் ஆவர். ராம்குமார், 3 மகன்களையும் வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார். அவர்கள் மூவரும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை விதைத்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.

மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2022-23-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதியதில் 300 மதிப்பெண்கள் பெற்றார். மனம் தளராமல் 2025-ம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி 420 மதிப்பெண்கள் பெற்றார். அப்போதும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் விடாமுயற்சியுடன் நீட் தேர்வை எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதனிடையே, இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதி முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்கள் பெற்றனர்.

இதையடுத்து, 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில், 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்குக் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற சவுராஷ்டிரா சங்கத்தின் 45-வது ஆண்டு விழாவில், இந்த 3 சகோதரர்களுக்கும், திருநெல்வேலி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர், சவுராஷ்டிரா சங்கத் தலைவர் ராம்தாஸ் உள்ளிட்டோர் கேடயம், பரிசுத் தொகை வழங்கி பாராட்டினர்.

<div class="paragraphs"><p>சகோதரர்கள் அருண், தரண், வெங்கட் ஸ்ரீ</p></div>
கோவளத்தில் நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷாவைச் சந்திக்கிறார் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in