“ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்” - அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதம்

தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற மாநாட்டில் பேச்சு
“ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்” - அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதம்

படம்: எல்.சீனிவாசன்

Updated on: 
2 min read

சென்னை: “இந்தியாவில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதிலும், காப்புரிமைக்கு விண்ணப்பிப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் இன்று (வியாழன்) நடைபெற்றது.

இந்த மாநாட்டை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியது: “இந்தியாவில் உயர் கல்வி செல்வோர் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்து தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. கற்பித்தல் திறன், கற்றல் திறன், ஆராய்ச்சிகள், பேராசிரியர்களின் பங்களிப்பு ஆகியவைதான் இதற்கு காரணம்.

தொழில்நுட்ப பரிமாற்ற மாநாடு தமிழகத்தில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. உயர் கல்வித் துறை செயலரின் ஆலோசனையை ஏற்று இந்த மாநாடு இனிமேல் ஆண்டுதோறும் நடத்தப்படும். சென்னையில் மட்டுமின்றி மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் நடத்துவோம்.

மத்திய அரசின் நிதி ஆயோக் இந்த மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழகம் 16,046 காப்புரிமை விண்ணப்பங்களை சமர்ப்பித்தும், 44,611 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியி்ட்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனைக்கு பின்னால் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாநில அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் இடையறாத உழைப்பு இருக்கிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் ஆய்வகத்தை விட்டு தயாரிப்பு நிலைக்கு வந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். அந்த வகையில், கண்டுபிடிப்புகள் மக்களை சென்றடைய உற்பத்தி நிலையை எட்ட, காப்புரிமை பெற மாநில அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இதன் கீழ் 40 அறிவுசார் சொத்துரிமை மையங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.

கல்வி நிறுவனங்களும் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். தொழில்துறையினரின் தேவைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். கல்வி என்பது வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. இந்த கனவை நனவாக்கும் வகையில் உயர்கல்வித்துறை பயணித்து வருகிறது” என்று அவர் பேசினார்.

உயர் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் பேசும்போது, "தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானது. தொழில்நுட்பங்கள் வணிக ரீதியில் உற்பத்தி நிலையை அடைவதும் முக்கியமானது. சீனாவில் 80 முதல் 90 சதவீத தொழில்நுட்பங்கள் உற்பத்தி நிலையை அடைந்து விடுகின்றன.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் தொழில்நுட்ப பரிமாற்ற மாநாடு முதல் முறையாக நடத்தப்படுகிறது. கோவை பள்ளி மாணவரின் உருவாக்கிய பழங்களை அறுவடை செய்யும் நவீன தொழில்நுட்பம் உள்பட 10 தொழில்நுட்பங்கள் வணிக ரீதியிலான செயல்பாட்டுக்கு வரும் வகையில் 10 புரிந்துரணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகவுள்ளன" என்று குறிப்பிட்டார்.

பின்னர் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு நூலை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

முன்னதாக, தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் - செயலர் எஸ்.வின்சென்ட் வரவேற்று பேசும்போது, “கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற தொழில்நுட்ப கவுன்சில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. 97 தொழில்நுட்பங்கள் உற்பத்தி நிலைக்கு தயார் நிலையில் உள்ளன" என்றார்.

நிறைவாக, கவுன்சில் அறிவியல் அலுவலர் அ.ரமணன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வி.குமரேசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், தொழில்துறையினர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பேட்டி: மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், "தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடம் நீண்ட காலமாக காலியாக இருக்கிறது. உடனடியாக பல்கலைக் கழகங்களில் நிர்வாக பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. எனினும் துணைவேந்தர் நியமனம் தாமதமாகி வருவதால் தற்காலிக ஏற்பாடாக பொறுப்பு துணைவேந்தர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழத்திலும் மூத்த பேராசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் இருந்து கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 3 பேர் தேர்வு செய்யப்படுவர். இறுதியாக விஜிலென்ஸ் அறிக்கை பெறப்பட்டு தகுதியான மூத்த பேராசிரியர் பொறுப்பு துணைவேந்தராக தேர்வு செய்யப்படுவார். இதுவும் தற்காலிக ஏற்பாடுதான். நிரந்தர துணைவேந்தர் நியமனம் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று அமைச்சர் கூறினார்.

“ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்” - அமைச்சர் விஸ்வநாதன் பெருமிதம்
“முதல்வர் விஜய் பொதுவெளிக்கு வந்து மக்களைச் சந்திக்க வேண்டும்” - பழனிசாமி

X