

கோப்புப் படம்
திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பட்டம் பெறும் மாணவர்கள், அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தொழில்முனைவோராக உருவாகும் நோக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்(ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்ஐடி) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு கிடைக்கிறது.
இதுவரை இக்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் பிரதான நிறுவனங்களில் வேலைவாய்ப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்த நிலையில், தற்போது தொழில்முனைவு நோக்கி அவர்களின் மனப்பான்மை மாறி வருவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் திருச்சி என்ஐடியின் இளநிலை படிப்பில் 908 மாணவர்கள் வளாக வேலைவாய்ப்பு பிரிவில் பதிவு செய்திருந்தனர். இதில் 703 பேர் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். முதுநிலை படிப்பில் 686 மாணவர்கள் பதிவு செய்ததில் 577 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் வேலைவாய்ப்பு விகிதம் 85 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 80 முதல் 83 சதவீதமாக உள்ளது. வேலைவாய்ப்பு விகிதம் சற்று குறைந்திருந்தாலும், அதற்கு மாணவர்களின் தொழில்முனைவு ஆர்வமே முக்கிய காரணம் என என்ஐடி வேலை வாய்ப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பட்டம் பெறும் மாணவர்களில் ஒரு பகுதியினர் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படுகின்றனர்.
தொழில்முனைவோராக உருவாக மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கல்வி நிறுவனமே செய்து வருகிறது.
மாணவர்களின் புதுமைத் திட்டங்களில், ட்ரோன்கள் மூலம் உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும் தொழில்முனைவு முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஜப்பானிய பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உள்ளிட்ட எதிர்காலத் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட பாடத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், முதல் கட்ட வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெறாத மாணவர்களுக்கும், அவர்கள் விருப்பம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி மீண்டும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.