‘வறுமையால் உயர் கல்விக்கு செல்லவில்லை’ - பரோட்டா கடையில் தந்தைக்கு உதவும் கோவில்பட்டி மாணவி

‘வறுமையால் உயர் கல்விக்கு செல்லவில்லை’ - பரோட்டா கடையில் தந்தைக்கு உதவும் கோவில்பட்டி மாணவி
Updated on
2 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வறுமை காரணமாக உயர் கல்விக்கு செல்ல முடியாததால் மாணவி ஒருவர் தனது தந்தைக்கு உதவியாக பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியை அடுத்த குருவிநத்தத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இருதயராஜ். இவர் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அந்தோணி செல்வி. இவர்களுக்கு ஜான்ஜோசப் ராஜ், வெரோணிக்கா விசாலி, அந்தோணி பிரிட்டோ ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்களில் வெரோணிக்கா விசாலி காமநாயக்கன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு கணிதம், உயிரியில் பிரிவில் 12-ம் வகுப்பு படித்து 317 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக உயர் கல்வியில் சேர முடியாததால், தந்தைக்கு உதவியாக ஹோட்டலில் பரோட்டா சுட்டு தருவதும், மீதமுள்ள நேரத்தில் ஜவுளி கடையிலும் வேலை பார்த்து வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் உயர் கல்வியில் சேர்க்க ஆண்டுதோறும் ‘உயர்வுக்கு படி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வறுமையின் பிடியில் உள்ளவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் என தனித்தனியாக பிரித்து விசாரணை மேற்கொண்டு, தமிழக அரசு அவர்களுக்குரிய உயர் கல்விக்கான செலவுத் தொகை ஏற்று வருகிறது.

இதில், விடுதியில் தங்கி படிக்கும் நிலை இருந்தாலும் அதனை அரசு ஏற்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, உயர் கல்விக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த குழந்தைகள், அவர்களின் பெற்றோரை அழைத்து உரிய அறிவுரைகளை வழங்கி, அவர்களுக்கு நிதி நெருக்கடி இருந்தால் அதனை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மூலம் உறுதி செய்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றனர். மாதந்தோறும் ரூ.1000-ம் அரசு வழங்குகிறது.

“உங்களுக்கு என்ன பொருளாதார சிக்கல் இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்களே கல்லூரி கட்டணத்தை செலுத்தி படிக்க வைத்து வருகிறோம். எனவே, மாணவ - மாணவிகள் உயர் கல்வி படிப்புக்கு வர வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து வருகிறார். ஆனால், வெரோணிக்கா விசாலி அதிலும் கூட உயர் கல்விக்கு சேராமல் இருந்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மாணவி வெரோணிக்கா விசாலி கூறியது: “எனது அண்ணன் ஜான்ஜோசப்ராஜ் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, வேலை செய்து வருகிறார். எனது தம்பி அந்தோணி பிரிட்டோ 9-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை விட்டுவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். எனது தந்தை நடத்தும் ஹோட்டல் வருமானம் தான் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.

எனது தாய் காட்டு வேலைக்கு செல்வார். நான் 12-ம் வகுப்பு முடித்ததும், கல்லூரிக்கு செல்லும் அளவுக்கு எங்கள் வீட்டு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. எனக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், வறுமை காரணமாக நான் வேலைக்கு செல்கிறேன். காலையில் எங்களது ஹோட்டலுக்கு வந்து சுத்தம் செய்வேன். பின்னர் தந்தைக்கு உதவியாக வடை தயாரிக்க வெங்காயம் வெட்டிக் கொடுப்பேன். 9 மணிக்கு மேல் ஜவுளிக்கடைக்கு வேலை சென்றுவிடுவேன். இரவு 7 மணிக்கு மேல் மீண்டும் ஹோட்டல் வந்து, உணவு பரிமாறுவது, பரோட்டா சுடுவது என தந்தைக்கு உதவி செய்கிறேன்.

நான் படித்த புனித அலோசியஸ் பள்ளியில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ஏன் கல்லூரியில் சேரவில்லை என்றனர். கல்லூரி படிப்பு செலவு செய்யும் அளவில் என குடும்பம் இல்லை என்றேன். என்னை 3 முறை வரை செல்போனில் அழைத்தனர். நான் எனது பதிலை நேரில் சென்று சொன்னேன். அப்போது நீ கல்லூரியில் சேர்ந்து அந்த ரசீதை மட்டும் எங்களிடம் கொடு. அதன் பின்னர் நீ படிக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த ரசீதை நாங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்றனர். அதற்கு நான் பதில் எதுவும் சொல்லவில்லை. அரசு உதவி செய்வது எனக்கு தெரியாது. அரசு உதவினால் கண்டிப்பாக கல்லூரி படிப்பை படிப்பேன். கண்டிப்பாக நல்ல வேலைக்கு சென்று வறுமையை வெல்வேன்” என்று அவர் கூறினார்.

அவரது தந்தை பிரான்சிஸ் இருதயராஜ் கூறுகையில், “கிராமத்தில் ஹோட்டல் கடை நடத்துகிறேன். ஒரு நாள் கடை திறக்கவில்லையென்றாலும், எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிடும். தினமும் உழைத்தால் தான் எங்களுக்கு சாப்பாடு. அதனால் கடையை மூடிவிட்டு செல்ல முடியவில்லை. அரசு உதவினால் கண்டிப்பாக எனது மகள் படிப்புக்கு நான் தடையாக இருக்க மாட்டேன்,” என்றார்.

‘வறுமையால் உயர் கல்விக்கு செல்லவில்லை’ - பரோட்டா கடையில் தந்தைக்கு உதவும் கோவில்பட்டி மாணவி
“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை, ஆனால்...” - டிடிவி தினகரன் விவரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in