சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம், கட்டுமானபாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சர்வதேச சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதன் மூலம் இளைஞர்களுக்கு உற்பத்தி, கட்டுமானம், உள்கட்டமைப்பு, சரக்கு மற்றும் போக்குவரத்து, கிடங்குகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நடப்பு கல்வி ஆண்டில் உயர் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக உலகளாவிய சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்படும். வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
இ்த்திட்டத்தின் கீழ், அப்ளைடு டேட்டாபேஸ் சிஸ்டம், அட்வான்ஸ்டு எலெக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்புகள் அளிக்கப்படும். வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய,வேலைவாய்ப்பு இல்லாத ஐடி பட்டதாரிகளுக்கு சர்வதேச சான்றிதழ் பயிற்சி மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு திட்டம் உருவாக்கப்படும்.
இதன்மூலம் முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்புகள் அளிக்கப்படும்.