

சென்னை: காலை உணவுத் திட்டத்துக்கான பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலைச் சிற்றுண்டி திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தவெக அரசு, இத்திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும், திட்டத்தின் பெயர், காமராஜர் காலை உணவுத் திட்டம் எனவும் மாற்றம் செய்யப்பட்டது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயர்ப் பலகையை இடம்பெறச் செய்யவேண்டும். அந்தப் பலகை எந்தளவில் இருக்க வேண்டும் என்பது உட்பட விவரங்களும், பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைப் பின்பற்றி கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பள்ளிகளின் சமையலறை, மின்விளக்கு, குடிநீர், இருப்பு அறை வசதிகள் சார்ந்த குறைபாடுகளை சொந்த நிதியின் மூலம் நிவர்த்தி செய்யவும், மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். சொந்த நிதியில் இந்த செலவினங்களை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறைச் செயலர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவுரையின்பேரில், கடலூர் மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சிறிய பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டுமென செப்.3-ம் தேதி மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.