

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் டிஸ்லெக்சியா, நரம்பியல் குறைபாடு, கை முறிவு ஏற்பட்டவர்கள், பார்வை சவால் கொண்ட மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு அவர்கள் சொல்வதை கேட்டு எழுதுபவர்களாக கடந்த ஆண்டு வரை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுமுதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள், கல்வியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஸ்கிரைபர்களாக நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்ததையடுத்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை போலவே பழைய அரசாணைகளை பின்பற்றி சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.