

சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வியாண்டில் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான உதவியாளர் (ஸ்கிரைப்) விவரங்களை பதிவு செய்ய வேண்டுமென என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளி மாணவர்களில் தேர்வெழுத உதவியாளர் (ஸ்கிரைப்) தேவைப்படுபவர்கள், தங்கள் ஸ்கிரைப் குறித்த விவரங்களை /cuet.nta.nic.in/ எனும் இணையதளத்தில் மே 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.