

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு நடைமுறையில் எந்த மாற்றம் இல்லை. வதந்திகளையும், தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று மாநில மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
அதேபோல், தமிழகத்தில் அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. 2026-27-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு நேற்று தொடங்கியுள்ள நிலையில், மாநில கலந்தாய்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது.
இதற்கிடையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால். தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கு தமிழக மாணவர் சேர்க்கைக்குழு அளித்துள்ள விளக்கத்தின் விவரம்: சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறையை பொருத்தவரை தமிழகத்தில் வழக்கம் போலவே ஒருங்கிணைந்த இணையழி நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். விண்ணப்ப பதிவின் போது மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் சான்றிதழ்கள் இணைய வழியிலேயே ஆய்வு செய்யப்படும்.
கலந்தாய்வுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் நேரடியாக சரிபார்க்கப்படும். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மருத்துவ இடங்களில் சேர விரும்பாத மாணவர்கள், அதற்கான நிராகரிப்பு விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnmedicalselection.org மூலமாக அந்த இடத்தை திருப்பி வழங்க விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அளிக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
முதல் சுற்றில் பங்கேற்ற மாணவர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் இடங்களை மாற்றிக்கொள்ளும் முறை வழக்கம்போலவே இருக்கும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மாநில தகவல் குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ளன.
அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி நிரப்பப்படும். மருத்துவ கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மாணவர் சேர்க்கை குழு இணையதளத்தில் வெளியிடப்படும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளையும் தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.