

சென்னை: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 47,579 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நம் நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி 2026-ம் ஆண்டுக்கான முதல்கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த ஜூன் 22 முதல் ஜூலை 5-ம் தேதி வரை பாடவாரியாக நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 7 லட்சத்து 73,806 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களில் 6 லட்சத்து 7,151 பேர் மட்டுமே தேர்வெழுதினர். இதன் முடிவுகளை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
இதையடுத்து பட்டதாரிகள் தங்கள் முடிவுகளை/ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தேர்வு எழுதியவர்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஜேஆர்எப் உதவித்தொகை பெற 4,241 பேரும், உதவி பேராசிரியர் பணி மற்றும் பிஎச்டி சேர்க்கைக்கு 45,904 பேரும், பிஎச்டி படிப்புக்கு 97,434 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 47,579 (19%) பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேநேரம் சென்ற தேர்வில் 24 சதவீதம் பேர் வரை தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், மதிப்பெண் சான்றிதழையும் பட்டதாரிகள் மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைத்தளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
3 பாடங்களுக்கு செப்.9, 10-ல் தேர்வு
தற்போது 84 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வினாத்தாள் பிழை காரணமாக, ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு, வரும் செப்.9, 10-ம் தேதிகளில் நடைபெறும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.