

பாணாவரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மொழி ஆய்வகத்தில் ஆங்கில மொழி பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்.
ராணிப்பேட்டை: ஆங்கில மொழியைப் பேசுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்களிடம் இருந்துவந்த தயக்கங்களை மாற்றும் முயற்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மொழிகள் ஆய்வகம்’ திட்டம் தற் போது புத்துயிர் பெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 120 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6, 7, 8 -ம் வகுப்புகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனர். பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் ‘மொழி ஆய்வகம்’ என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டும் பார்க்காமல், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய மொழியாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக ஆங்கிலத்தை அச்சமின்றி பேசுதல், கேட்டுப் புரிந்துகொள்ளுதல், புதிய சொற்களை அறிந்து பயன்படுத்துதல், வாக்கியங்களை அமைத்துப் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு மொழித்திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் மட்டுமின்றி, இணையதளத்தின் வாயிலாக தாங்களாகவே பயிற்சி மேற்கொள்ளும் வகையில் கற்றல்-கற்பித்தல் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
கணினி மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் ஆங்கில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களைக் கேட்டு, அவற்றை உச்சரித்து, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய முடிகிறது. இதன் மூலம் வகுப்பறையில் பேசத் தயங்கும் மாணவர்களுக்கும் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தொடர் மீளாய்வுக் கூட்டங்களின் விளைவாக, 2026-27 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு ஆங்கில வகுப்பு, மொழிகள் ஆய்வகப் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் இந்த வகுப்புகளில் பங்கேற்று ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதுடன், சக மாணவர்களுடன் இணைந்து உரையாடல் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமான வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதைக் கேட்டு எழுதும் முறைக்கு மாறாக, மொழி ஆய்வகத்தில் மாணவர்களே செயல்பட்டுக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஆங்கிலத்தில் தவறு செய்து விடுவோமோ என்ற அச்சம் படிப்படியாகக் குறைந்து ஆங்கிலத்தில் உரையாடும் திறன் மேம்பட்டு வருகிறது. ஆசிரியர்களும் இத்திட்டத்தை ஆர்வத்துடன் வரவேற்றுச் செயல்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாணவரின் மொழித்திறனையும் கவனித்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதுடன், ஆங்கிலத்தில் பேசுவதற்கான சூழலையும் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தயங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களும் மற்ற மாணவர்களுக்கு இணையாக உரையாடும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மாணவர்களிடையே ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பாடப்புத்தகத்தில் உள்ள ஆங்கிலத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல், தங்களது எண்ணங்களை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் உருவாகியுள்ளது. சக மாணவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், தங்களால் ஆங்கிலத்தில் பேச முடிகிறது என்ற தன்னம்பிக்கையும் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மொழித்திறன் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ‘மொழி ஆய்வகம்’ போன்ற திட்டங்கள் அவர்களின் எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் அச்சமின்றி பேசும் திறன், சுயமாகக் கற்றுக்கொள்ளும் பழக்கம், பிறருடன் இணைந்து செயல்படும் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்க்கும் இந்த முயற்சி, ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் மொழித்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.