

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 14-ல் செவிலியர் பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக மே 18 முதல் ஜூன் 1-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் புதுச்சேரி மருத்துவத் துறை இயக்குநரும் நோடல் அதிகாரியுமான டாக்டர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது: ”புதுடெல்லியில் உள்ள இந்திய செவிலியர் மன்றத்தின் செயலாளரால் ஜனவரி 29-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் செவிலியர் தேர்வுகள் வாரியம் மூலம், பிஎஸ்சி (நர்சிங்) சென்டாக் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்த முன்மொழிந்துள்ளது.
அதன்படி, பொது நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 14-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பதிவு விண்ணப்பம் சென்டாக் இணையத் தளத்தில் ( https://www.centacpuducherry.in/) வரும் மே 18-ம் தேதி காலை 10 முதல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி மாலை 5.45 மணியுடன் நிறைவடைகிறது.
பிஎஸ்சி (நர்சிங்) படிக்க விரும்புவோர், சென்டாக் படிப்புக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் இரண்டு முறை விண்ணப்பிக்க வேண்டும். முதலில் நீட் அல்லாத படிப்புகளுக்கும், பின்னர் பிரத்தியேகமாக பிஎஸ்சி (நர்சிங்) படிப்புக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IGMC & RI) நர்சிங் கல்லூரியில் உள்ள பிஎஸ்சி (நர்சிங்) சுயநிதி இடங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அன்னை தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (MTPG&RI) உள்ள சுயநிதி, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களும் நீட் இளங்கலை (NEET UG) மதிப்பெண்களை கருத்தில் கொண்டு நிரப்பப்படும்.
மேலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே சேர்க்கை நடைபெறும். தற்போதைய நிலவரப்படி, கலந்தாய்வுக்காகக் கிடைக்கும் மொத்த சென்டாக் பிஎஸ்சி (நர்சிங்) அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை 558 ஆகும்” என்று டாக்டர் செவ்வேள் தெரிவித்தார்.