

மருத்துவர் விக்னேஷ் துரை
புதுச்சேரி: ஜிப்மர் முதுநிலை பயிற்சி மருத்துவர் விக்னேஷ் துரை, எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (AIIMS), தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (INI-SS) தேர்வு நடந்தது. கடந்த ஜனவரி 2026 அமர்வில் ஜிப்மர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை பயிற்சி மருத்துவரான விக்னேஷ் துரை பங்கேற்றார். இவர் அகில இந்திய அளவில் முதல் இடத்தை (AIR I) பெற்றுள்ளார்.
டாக்டர் விக்னேஷ் துரை , தனது எம்பிபிஎஸ் பட்டத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் (2013-2019) முடித்தார். ஜிப்மரில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் தனது எம்எஸ் பட்டத்தைப் பெற்றார் (2020-2022). அவர் தற்போது ஜிப்மரின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் முதுநிலை பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
எம்சிஎச் (மகளிர் மருத்துவ புற்றுநோயியல்) பாடத்துக்கான மிகவும் போட்டி நிறைந்த எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (INI-SS) தேர்வில் டாக்டர் விக்னேஷ் துரை தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது.