கோப்புப் படம்
திருச்சி: ‘தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் நாள் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது என்பது மணலை கயிறாக திரிப்பதற்கு சமம்’ என்று தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் (டப்மா) கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆணையர் தலைமையில் கடந்த 19-ம் தேதி ‘ஜூம் மீட்டிங்’ வாயிலாக அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதில், மனவெழுச்சி நுண்ணறிவு மூலம் வாழ்க்கைத் திறன்களில் ஆற்றல் பெறுதல் என்ற தலைப்பில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் நவ.24 முதல் டிச.6 வரை ஆன்லைன் மூலம் நிபுணர் ஒருவரை கொண்டு வகுப்புகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, தமிழ்நாடு உதவிபெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் கடும் எதிர்வினையாற்றி உள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் பி.வி.கந்தசாமி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தற்போது நடைபெற்று வரும் எழுத்துத் தேர்வும், செய்முறை தேர்வும் டிச.2 வரை நடத்த கால அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்பை நடத்துவதற்காக 15 நாட்கள் நடத்த வேண்டிய தேர்வுகளை, நவ.23-ம் தேதிக்குள் முடிக்க இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது. இது மிகவும் சிரமமான நடைமுறையாகும். மேலும், காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக கிராமப்புற மாணவிகள் வீடு திரும்ப இரவு 8 மணி வரை ஆகிவிடும் என்பதால், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே, வகுப்பு நேரத்தை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை என பரிசீலிக்கலாம். அத்துடன், எங்களது மாணவர்களுக்கு ஆங்கில வழியில் மட்டும் பயிற்சி கொடுப்பது என்பது எந்த பலனையும் தராது.
எனவே தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழிகளிலும் இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். ஏழை மாணவர்கள் மற்றும் நிதி ரீதியாக நலிவடைந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் நிவாரணம் பெறும் வகையில், பயிற்சிப் பொருட்களை அரசே இலவசமாக வழங்கலாம்.
அதேபோல, ஒரே நேரத்தில் சுமார் 40 ஆயிரம் மாணவர்களை ஆன்லைன் வாயிலாக இணைப்பது என்பது மணலை கயிறாகத் திரிப்பதற்கு சமமாகும். நாங்கள் இந்த பயிற்சி வகுப்பு வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக அவசர கதியில் நடத்தாமல், தகுந்த ஏற்பாடுகளுடன் செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் முடிந்த பிறகு அதாவது டிச.2-ம் தேதிக்கு பிறகு நடத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.