

திருப்பத்தூர்: மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த புதுமையான ஆங்கில பூங்காவை அரசு பள்ளி ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளது கல்வியாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கில் புதுமையான ஆங்கில பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளி ஆசிரியர் சி.சரவணன் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் ஆசிரியர் சி.சரவணன் கூறும்போது, ‘‘தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) அடிப்படையில் இந்த ஆங்கில பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் ஃ போனிக்ஸ் மலர்கள், சொற்களஞ்சிய ரயில், டயர் நூலகம், இலக்கண மூலை, வாசிப்பு பகுதி, கேள்வி சக்கரம் உட்பட பல்வேறு கற்றல் மையங்கனை அமைத்துள்ளோம்.
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, மாணவர்கள் விளையாடிக்கொண்டே ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள உதவும். இதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்துத்திறன், பேச்சு மற்றும் சொற்களஞ்சிய திறன்கள் மேம்படுகின்றன.
கல்வி என்பது புத்தக அறிவை மட்டும் வழங்கும் செயலாக இல்லாமல், மாணவர்களின் திறன்களை முழுமையாக வெளிக்கொண்டு வரும் ஒரு வாழ்க்கை முறை பயணமாகும். குறிப்பாக, மொழி கற்றல் என்பது வகுப்பறை சுவர்களுக்குள் மட்டும் இல்லாமல், அனுபவத்தின் வாயிலாக மாணவர்களிடம் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
தேசிய கல்வி கொள்கையை அடிப்படையாக கொண்டு ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலை பள்ளியில் இந்த புதுமையான ஆங்கில பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வியில் ஆங்கில மொழி ஒரு முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இப் பூங்காவின் முக்கிய அம்சமாக ஃபோனிக்ஸ் மலர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மலரும் ஒரு எழுத்தின் ஒலியைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் எழுத்துக்களின் ஒலியை தெளிவாக உச்சரிக்க கற்றுக்கொள்கின்றனர். சரியான உச்சரிப்பு திறனை வளர்ப்பதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. சொற்களஞ்சிய ரயில் மாணவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் புதிய சொற்கள், அவற்றின் பொருள் மற்றும் பயன்பாடு இடம் பெற்றுள்ளன.
மாணவர்கள் விளையாட்டின் மூலம் புதிய சொற்களை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த சொற்களை கொண்டு வாக்கியங்களையும் உருவாக்குகின்றனர். இலக்கண மூலையில் பெயர்ச் சொல், வினைச்சொல், பெயரடை, காலங்கள், வாக்கிய அமைப்பு போன்ற இலக்கண கூறுகள் எளிமையான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் இலக்கணத்தை மனப்பாடம் செய்வதற்கு பதிலாக, நேரடியாக புரிந்துகொண்டு கற்றுக்கொள்கின்றனர்.
இந்த புதுமையான முயற்சி பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிற பள்ளிகளும் இதனை முன்மாதிரியாக கொண்டு இதுபோன்ற கற்றல் மையங்களை உருவாக்க முன்வந்துள்ளன. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் இந்த முயற்சி. எதிர்காலத்தில் பல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் ஒரு முன்னோடி மாதிரியாக விளங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை’’ என்றார்.