

சென்னை: ராமராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருதுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்க உள்ளது. இவ்விருதுக்கு ஜூலை 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறியிருந்த நிலையில், ஏராளமான ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கேற்ப விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல், மாறுபட்ட சிந்தனையோடும், புதுமை உணர்வோடும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி,நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்காகவே இந்த ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. இதனை ராஜலட்சுமி இன்ஜினீயரிங் கல்லூரி இணைந்து வழங்குகிறது. பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம், சாந்தாஸ் சில்க்ஸ் மதுரை பங்குதாரராக இணைந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாவர். ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய ‘அன்பாசிரியர்’ விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம். இந்த விருதுக்கு இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?- இத்துடன் கொடுக்கப்பட் டுள்ள க்யூஆர்கோடை ஸ்கேன்செய்து, அதிலுள்ள விண்ணப்பப் படிவத்தின் மூலமாக பதிவு செய்யுங்கள். அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள் / வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்தோடு சேர்த்து அனுப்புங்கள்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப் பட்ட ஆசிரியர்களுக்கான நேர்காணல் ஆன்லைனில் நடைபெறும். மூத்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள் அடங்கிய குழுவினர் ஆன்லைன் நேர்காணலை நடத்துவார்கள். தங்களது சாதனை சான்றிதழ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களுடன் ஆன்லைன் நேர்காணலில் ஆசிரியர் கள் பங்கேற்க வேண்டும். தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 2 மாவட்டங்கள் என 40 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.