

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொழில்நுட்ப- மேலாண்மை விழாவான கிராவிடாஸ் விழா செப்.18-ம் தேதி தொடங்கி செப்.20-ம் தேதி வரை நடைபெறுகிறது என வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விஐடி பல்கலைக்கழகத்தில் செப்.18-ம் தேதி தொடங்கும் கிராவிடாஸ் விழாவில் சென்னையில் உள்ள வங்கதேச துணைத் தூதரக தூதர் முகமது அலிமுசமான் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். கிராவிடாஸ் நிகழ்வில் மொத்தம் 227 நிகழ்வுகளில் 40 ஆயிரத்துக் கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில், 76 நிகழ்வுகள் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 151 நிகழ்வுகள் விழாவில் நடைபெற உள்ளன. இந்த முறை 157 புதிய நிகழ்வுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் 31 ஹேக்கத்தான்கள், 62 பயிலரங்குகள், 57 தொழில்நுட்ப போட்டிகள், 10 தொழில்முனைவோர் நிகழ்வுகள் மற்றும் 67 இதர நிகழ்வுகள் அடங்கும்.
ரோபோ வார்ஸ், குக்ஆஃப், ஏரோடாமினேட்டர், குவாட்காப்டர் போன்ற நிகழ்வுகளும் இம்முறையும் இடம்பெறுகின்றன. மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் ரொக்கமாகவும், ரூ.1.5 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களாகவும் வழங்கப்படவுள்ளன. கேபிடல் ஹண்ட் 2.0, 36 மணி நேர செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தானான ஃபோர்ஜ் ஏஐ, ஏஆர்/ விஆர் விளையாட்டு அனுபவமான கார்னிவர்ஸ் ஆகிய முக்கிய நிகழ்வுகளும், தொழில்நுட்ப கண்காட்சிகளும் புதுமையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மேலும், மோட்டோவால்ட் என்ற ஆட்டோ எக்ஸ்போ மற்றும் இந்திய ராணுவ தொழில்நுட்பங்களை வெளிக்காட்டும் வகையில் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சிவிஆர்டிஇ நடத்தும் கண்காட்சியும் இடம்பெறுகின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
“ஷார்க் டேங்க் இந்தியா” நிகழ்ச்சியின் நடுவர் குழு உறுப்பினரும், போட் லைஃப்ஸ்டைல் இணை நிறுவனருமான அமன்குப்தாவுடன் சிறப்பு உரை யாடல் அமர்வு இடம்பெறுகிறது. வரும் செப்.20-ம் தேதி நிறைவு விழாவில் காக்னிசன்ட் நிறுவன திறமையாளர் தேர்வு பிரிவின் உலகளாவிய தலைவர் அதுல் சாஹல் தலைமை விருந்தினராகவும், விஐடி முன்னாள் மாணவரும், டிஜி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹேமந்த் சாஹல் சிறப்புவிருந்தினராகவும் பங்கேற்கின்றனர். இவ்வாறு கூறினார்.