பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
2 min read

புதுக்கோட்டை: பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் அரசு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களில் அரசின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் பயனுள்ளதாக உள்ளது.

முதற்கட்டமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு வழங்கப்பட்டு, அதன்பிறகு பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு இளநிலை படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதேபோல, பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் இந்த உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஆ.மணிகண்டன் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், சமூக நீதியைக் காக்கும் வகையிலும் பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஏனெனில், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களில் 40 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு தரும் செவிலியர், மருந்தாளுநர், மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சி மருத்துவம், ஆய்வகத் தொழில்நுட்பம், எக்ஸ்-ரே / ஸ்கேன் தொழில்நுட்பம், இதய பரிசோதனை, அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல், டயாலிசிஸ், மருத்துவர் உதவியாளர், சுவாச சிகிச்சை, கண் பரிசோதனை உள்ளிட்ட படிப்புகளை உள்ளடக்கிய பாராமெடிக்கல் படிப்புகளையே விரும்புகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மாணவ- மாணவிகள் இந்தப் படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் மூலம் நடத்தப்படும் இப்படிப்புகளுக்கு, பிளஸ் 2 தேர்வு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றும் அரசுப் பள்ளி மாணவர்களால், தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு இடங்களைப் பெறமுடிவதில்லை. தனியார் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளுக்கு பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளதால் அதை விரும்புவதில்லை.

தமிழகத்தில் உள்ள அரசு பாராமெடிக்கல் கல்லூரிகளில் 2,786 இடங்களும், 405 சுயநிதி, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 17,165 இடங்களும் உள்ளன. அதேவேளையில், பாராமெடிக்கல் படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், ஆண்டுதோறும் 209 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளிலும், 1,287-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுயநிதி மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலும் இலவச சேர்க்கை சாத்தியமாகும்.

நிகழாண்டு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி உரிமையைக் கருத்தில் கொண்டு, பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் வழங்க வேண்டும். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடமும் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘இக்கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று, இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
கர்நாடகாவில் மனைவியை கொன்ற கணவர் கைது: வீடியோவை பெற்றோருக்கு பகிர்ந்ததால் அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in