

சென்னை: “அரசு கல்லூரி இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கும் முறையை கைவிட்டு, முன்பு இருந்து வந்ததை போல அரசு கல்லூரி மூத்த முதல்வர் ஒருவரை இயக்குநராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக முதல்வருக்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சுரேஷ் வெளியிட்ட அறிக்கையில், “சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வந்த மூத்த முதல்வர்களில் ஒருவரே கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டு வந்தனர். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுய நிதி கல்லூரிகள் என சுமார் 1,000 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்த முழுமையான புரிதலும், அவற்றை நிர்வகிப்பதில் நீண்டகால அனுபவமும் கொண்ட ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையிலேயே, அரசுக் கல்லூரி முதல்வர்களில் மூத்த முதல்வரை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கும் நடைமுறையை அரசு பின்பற்றி வந்தது. இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி அன்று கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்த மூத்த கல்லூரி முதல்வர் ஒருவர் நிர்வாகக் காரணங்களுக்காகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகச் செயல்பாடுகளைச் சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓராண்டு காலத்திற்கு மட்டுமே இந்நியமனம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து, ஐஏஎஸ் அதிகாரி கார்மேகம், கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அவருக்குப் பிறகு ஐஏஎஸ் அதிகாரி சுந்தரவல்லி கல்லூரிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றிய பின்னரும், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் மூத்த முதல்வர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
எனவே, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் மூத்த முதல்வர்களில் ஒருவரை மீண்டும் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, எங்கள் கழகத்தின் சார்பில் முந்தைய ஆட்சிக் காலத்தில் முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், முந்தைய அரசு எங்களது கோரிக்கையைப் பரிசீலிக்காத நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற அரசிடமும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்தும், ஊடகங்கள் வாயிலாகவும் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா கல்லூரிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அரசுக் கல்லூரி முதல்வர்களில் மூத்த முதல்வர் ஒருவர் கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பணியாற்றிய காலங்களில், அவர் விடுப்பில் செல்லும்போதெல்லாம், அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் (திட்டம் மற்றும் வளர்ச்சி) கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு வந்தது. இதனால், அன்றாட நிர்வாகப் பணிகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ஆனால், கல்லூரிக் கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படும்போது, அவர் விடுப்பில் செல்லும் சமயங்களில், கூடுதல் பொறுப்பு மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது கல்லூரிக் கல்வி ஆணையரின் கூடுதல் பொறுப்பு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஏற்கனவே ஏராளமான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பை வகித்து வருகிறார். மேலும், இரண்டு மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பொறுப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இத்தகைய சூழலில், ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் பொறுப்பையும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரிடம் ஒப்படைப்பது, தேவையற்ற நிர்வாகச் சுமையை ஏற்படுத்துவதுடன், அரசுக் கல்லூரிகளின் சீரான செயல்பாட்டையும் பாதிக்கிறது.
எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, எங்களது நீண்டகாலக் கோரிக்கையைப் பரிசீலித்து, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் மூத்த முதல்வர்களில் ஒருவரைக் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இதன் மூலம் அரசுக் கல்லூரிகளின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளும், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகச் செயல்பாடுகளும் எவ்விதத் தடையுமின்றி சீராகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்.” என்று அவர் கூறியுள்ளார்.