

சென்னை: உயர்கல்வி சேர்க்கை பெறுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள், பெற்றோர் உறுதிசெய்யுமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்கள் அல்லது யுஜிசி சட்ட விதிகளின்படி உரிய அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்பது மாணவர்கள், பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
எனினும், யுஜிசி விதிமுறைகளுக்கு முரணாக பல்வேறு நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இத்தகைய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள், யுஜிசியால் அங்கீகரிக்கப்படாது.
அவை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் செல்லுபடியாகாது. எனவே, உயர்கல்விக்காக சேர்க்கை பெறுவதற்கு முன்பு, அந்த கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை மாணவர்கள், பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், போலி உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்களை www.ugc.gov.in எனும் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள், படிப்புகளை வழங்குவது தெரியவந்தால், ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு புகார்களை அனுப்பலாம்.