

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. அதில், 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியருக்கு மட்டும் விலக்கு தரப்பட்டது. மற்றவர்கள் 2 ஆண்டுகளில் ‘டெட்’தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் கட்டாய ஓய்வு வழங்கும்படி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம்,தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘ஏற்கெனவே பணியிலுள்ள ஆசிரியர் களிடம் ‘டெட்’ தேர்ச்சி பெறச் சொல்வது அவர்களுக்கு மனரீதியான பாதிப்பையும், நிதி பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன.
அனுபவமிக்க ஆசிரியர்கள் வெளியேறுவது கல்வி முறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். இந்த தீர்ப்பால் தமிழகத்தில் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும்.
அதன்படி ஆசிரியர்களின் வயது, பணியில் சேர்ந்த காலம் ஆகியவற்றை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் தரக்கூடிய வழிகள் மற்றும் சட்டரீதியான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ‘டெட்’ தேர்ச்சி பெறாமல் பணியிலுள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடக்கக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. அந்த விவரம்மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.