

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இணையவழி மற்றும் தொலைதூர கல்வியில் முதுநிலை பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு, உரிய காலத்தில் தேர்வை நடத்தாததால் படிப்புகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரம், இணையவழி மற்றும் சான்றிதழ் படிப்புகள் என தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இதில் முதுநிலை பாடத்தில் சேர்ந்த பலருக்கும் உரிய காலத்துக்குள் தேர்வுகளை நடத்தாததால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “கடந்த 2024 ஜூலை, அக்டோபர் மாதங்களில் முதுநிலை படிப்பில், தொலைநிலைக் கல்வியில் சேர்ந்தோம். அதன் பின்னர் முதல் பருவத்தேர்வே 14 மாதங்கள் கழித்து 2025 டிசம்பர் மாதம்தான் நடந்தது. கடந்த ஜூலையில் 2-வது பருவத்தேர்வு நடந்தது.
பருவத்தேர்வு அறிவிப்பில் குழப்பங்களும் இருந்தன. தற்போது வரும் செப்டம்பர் 5-ம் தேதி 3-ம் பருவத்தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இது போன்று அறிவிக்கப்பட்டு, தேர்வுகளை ஒத்தி வைத்த நிகழ்வுகள் நடந்துள்ளன. தற்போதைய அறிவிப்பின்படி உடனடியாக தேர்வுகளை முடிக்க வேண்டும்.
ஜூலை 2024-ல் தொடங்கினால் ஜூலை 2026-ல் முடிக்க வேண்டும். 2 ஆண்டு முதுநிலை படிப்பை இரண்டரை ஆண்டுகள் வரை படிக்கும் நிலை உள்ளது. அதேபோல் இணையவழி வகுப்புகளும் வருகைப் பதிவை மட்டும் உறுதி செய்யும் வகையில் உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எங்கள் பிரச்சினைகளை இணையத்தில் புகார் அளித்தாலும், ஆக்கப்பூர்வ பதில் இல்லை. அதேபோல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமும் உரிய முறையில் வேலை செய்வதில்லை. இதனால் படிப்பவர்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலும் எங்கள் வீட்டில் யாரேனும் அடுத்ததாக வேலைக்கு சென்றுகொண்டே படிக்க நினைத்தால் கூட இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு தான் கல்வித்தரம் இருக்கிறது” என்றனர்.
பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குநர் ப.செல்லச்சாமி கூறியதாவது: 14 முதுநிலை படிப்புகள் உள்ளன. தற்போது முதுநிலை மாணவர்களுக்கு தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தேதியில் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும்.
கடந்த கால குளறுபடிகள் சரி செய்யப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டுக்குள் முதுநிலையில் தாமதம் ஏற்பட்ட படிப்புக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். இணையவழி வகுப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்கிறேன். தொடர்ந்து அந்த வகுப்புகளையும் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.