சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா - 84 நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா - 84 நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
Updated on
3 min read

சென்னை: சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் பொது நூலகத் துறையின் மூலமாக 84 நூல்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (18.01.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026- இன், நிறைவு விழாவில் தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியம் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 44 நூல்கள் மற்றும் பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களை உலகளாவிய மேடையில் முன்னிறுத்தும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஜனவரி 16 முதல் 18 வரை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

'நாகரிகங்களுக்கு இடையேயான ஒரு உரையாடல்' (A Conversation between Civilisations) என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டாடப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, குறுகிய காலத்திலேயே உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற இலக்கிய மேடையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2023 ஆம் ஆண்டில், 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, 2024 ஆம் ஆண்டில், 40 நாடுகள் பங்கேற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, 2025 ஆம் ஆண்டில், 64 நாடுகள் பங்கேற்று 1354 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதுடன், சுமார் 135 தமிழ் எழுத்தாளர்களின் 260 நூல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்வில், தமிழ் மொழியின் தனித்துவமும் சிறப்பும் உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் அளவில் தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் இலக்கிய முகவர்களின் பங்கு இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு 110 பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள 187 எழுத்தாளர்களின் 350 நூல்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 இலக்கிய முகவர்கள், பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள், பன்னாட்டு இலக்கிய முகவர்கள் மற்றும் காப்புரிமை மேலாளர்களுடன் தமிழ் நூல்களின் உரிமையை பிற மொழிகளுக்கும், பிற மொழி நூல்களின் உரிமையை தமிழுக்கும் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், இந்நிகழ்வில் 1800-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026-ன் சிறப்பம்சங்கள்:

தமிழ்நாடு பதிப்பாளர்களுக்கான பிரான்ஸ் அரசின் சிறப்பு அமர்வுகள், TEDA Türkiye என்ற துருக்கிய அரசின் மானியம் பற்றிய கருத்தரங்கு, போலோனியா குழந்தை புத்தகக் கண்காட்சியின் ஓவிய வடிவமைப்பு, கருத்துப்படம் மற்றும் மொழிபெயர்ப்பு அமர்வுகள் நடைபெற்றன. உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் முதல் நம் நாட்டின் சிறந்த எழுத்து ஆளுமைகள் வரை பங்கு பெற்ற இந்த 17 அமர்வுகளில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இவ்வாண்டு, தமிழ்நாடு அரசின் சென்னைப் புத்தகப் பூங்கா உள்ளிட்ட 20 தமிழ் பதிப்பாளர்களின் அரங்கங்கள் இப்புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றதோடு, அதன் வாயிலாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகங்களை வாங்கிச் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியாக விளங்கும் பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியின் (Frankfurt Book Fair) ஒருங்கிணைப்பாளர்களை மதிப்புறு விருந்தினராக (Guest of Honour) வரவேற்று சிறப்பிக்கப்பட்டது. இது சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் சர்வதேச முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைந்தது.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 150-க்கும் அதிகமான பதிப்புத் துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று, உலகளாவிய பதிப்புத் துறையின் தற்போதைய பதிப்புத் துறையின் போக்குகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். மொத்தம் 17 கருத்தரங்குகள் / கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த ஆண்டு, முதல் முறையாக இக்கருத்தரங்குகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 நிறைவு விழா நிகழ்ச்சி:

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026- இன், நிறைவு விழாவில் தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியம் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 44 நூல்கள் மற்றும் பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 நூல்களை முதல்வர் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் முன்னிலையில், உலகளாவிய பதிப்பு சந்தை நிலவரங்கள், பண்பாடு,கலாச்சாரம் மற்றும் இலக்கிய பரிமாற்றங்கள், உலகளாவிய புத்தகத் திருவிழாக்களில் தமிழ் பதிப்பாளர்களின் பங்கேற்பு ஆகியவற்றில் தொடர் பங்கேற்பினை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு அரசிற்கும், துருக்கி, மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியங்கள் பட்டியலை (Tamil Nadu Translation Grants Catalogue) முதல்வர் வெளியிட்டார். தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களை உலகளாவிய மேடையில் முன்னிறுத்தும் வகையில் தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயரப்பு செய்திட தமிழ்நாடு அரசு கடந்த மூன்று வருடங்களாக மொழிபெயர்ப்பு மானியத்தினை தொடர்ந்து வழங்கி வருகிறது.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026-ல், 102 நாடுகளுடன் 1830-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு 1273 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு 260 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், பிற மொழிகளுக்கு இடையே 297 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு, 'தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும்', இந்திய மொழிகளை உலக மொழிகளுக்கும் கொண்டு செல்லும் மிக உயரிய இலக்கிய பரிமாற்ற தளமாக உலகளவில் உயர்ந்து நிற்கிறது.

இந்நிகழ்வு ஒரு இலக்கிய பரிமாற்றம் மட்டுமல்லாது, உலக 'நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்' எனும் உயரிய நோக்கத்தினை நிறைவு செய்துள்ளது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா - 84 நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
“கோவளம் நன்னீர் தேக்க திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” - சீமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in