

சென்னை: பள்ளிகளில் மாணவிகளுக் கான மாதவிடாய் சுகாதார மேலாண்மை மேற்கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில், அனைத்து விதமான பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விவரம்: பள்ளிகளில் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார மேலாண்மையை உறுதி செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த கழிப்பறைகளில் எரியூட்டிகள் அல்லது முறையான மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை முறையாக கண்காணிக்க வேண்டும்.
இதுதவிர, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தவும், இதுதொடர்பான சமூக தயக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் போக்கவும் பள்ளிகள் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இந்த நடவடிக்கையானது மாணவிகளின் கண்ணியம், உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணிக் காப்பதோடு, அவர்களின் பள்ளி இடைநிற்றலை தடுத்து வருகைப் பதிவை அதிகரிக்கவும் உதவும்.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளும் உடனடியாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.