

விஐடி பல்கலைக்கழகத்தில், பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்றார். உடன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆர் துணைத் தலைவர் சுதாகர் குடிபதி உள்ளிட்டோர்.
வேலூர்: விஐடி பல்கலைக்கழகம் மற்றும் புனே பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷன் இடையே பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்கள் குறித்த பயிற்சி அளிப்பதற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையமான ‘பெஸ்ட்’அமையவுள்ளது.
ரூ.15 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த மையம் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அமைப்புகள் மற்றும் இ-மொபிலிட்டி ஆகிய துறைகளில் மேம்பட்ட பயிற்சி அளிப்பதற்கான அதிநவீன வசதிகளை கொண்டிருக்கும். விஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங், விஎல்எஸ்ஐ டிசைன் அண்ட் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட முக்கிய பொறியியல் மாணவர்கள் இந்த மையம் மூலம் பலன் பெறுவர்.
இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறும்போது, “செய்முறை வழியிலான கற்றலுக்கு விஐடி முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரூ.15 கோடிமுதலீட்டிலான ‘பெஸ்ட்’ மையம், மாணவர்களுக்கு அதிநவீன மற்றும் ஆழமான பயிற்சி சூழலை வழங்கி, விஐடி மாணவர்களின் திறனை மேம்படுத்தி அவர்களை தொழில்துறையில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக மாற்றும்” என்றார்.
பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆர் துணைத்தலைவர் சுதாகர் குடிபதி கூறும்போது, “உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் வேகமாக வளர்ந்து வருவதால், அதிக திறன் கொண்ட பணியாளர்களுக்கான தேவை பெருமளவில் உருவாகியுள்ளது. இந்தத் திறன் இடைவெளியை குறைக்க இந்தியா முழுவதும் பல ‘பெஸ்ட்’ மையங்களை நிறுவ பஜாஜ் திட்டமிட்டுள்ளது” என்றார்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான திறன் மேம்பாட்டு பயிற்சி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை திட்டங்கள் குறித்து பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆர் தலைவர் ரமேஷ் விரிவாக விளக்கினார். இதில், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர்விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன்,இணை துணைவேந்தர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக இயந்திரவியல் பொறியியல் பள்ளியின் முதன்மையர் பி.குப்பன் வரவேற்றார். வி-ஸ்பேஸ் இயக்குநர் எஸ்.சிவானந்தம் நன்றி கூறினார்.