

புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், மருத்துவ இடங்களை அதிகரிக்கவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 2026- 27 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை டிச. 29-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நேரடி ஆய்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.
வரும் 2026 ஜனவரி 28-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகள், அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அத்தியாவசிய சான்று, இணைப்புக் கல்லூரி ஒப்புகை சான்று, மருத்துவமனை விவரங்கள், கல்விக் கட்டண விவரங்களை இணைத்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.