

கோப்புப் படம்
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்படபல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டுமுதல் அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக முன்கூட்டியே மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2026-27) மாணவர் சேர்க்கையும் நேற்றுமுதல் தொடங்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்து,புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கான நலத்திட்டப் பொருட்களை வழங்கினார்.
இதுதவிர அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், நடப்பாண்டில் 5 லட்சம் பேரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.