தொலைதூர கல்வி முறையில் வேளாண் படிப்புகளில் சேர அழைப்பு

தொலைதூர கல்வி முறையில் வேளாண் படிப்புகளில் சேர அழைப்பு
Updated on
1 min read

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்த வெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கக இயக்குநர் பா.பாலசுப்பிரமணியம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: 10-ம் வகுப்புக்கு பிறகு உயர் கல்வியைத் தொடர இயலாதவர்கள் வேளாண்மை பட்டயப் படிப்பு படிக்கலாம்.

பண்ணைத் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், பண்ணைக் கருவிகள் மற்றும் அதன் பராமரிப்பு, வேளாண் கிடங்கில் உரத் தட்டுப்பாடு, மூலிகை அறிவியல், தென்னை உற்பத்தி தொழில்நுட்பங்கள், கரும்பு தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, வணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் நோய் கொல்லிகள் உற்பத்தி, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், மருத்துவப் பயிர்கள் உற்பத்தி மற்றும் தர நிர்ணயம் மற்றும் தேயிலை உற்பத்தி மேலாண்மை என 12 விதமான பட்டயப் படிப்புகள் உள்ளன. தமிழ் வழிக்கல்வியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை ஓராண்டு படிப்புகள்தான்.

மொத்தம் 2 பருவங்களாக தேர்வு நடைபெறும். நேர்முக பயிற்சி வகுப்புகள் ஒரு பருவத்துக்கு 5 நாட்கள் வீதம், 2 பருவத்துக்கு 10 நாட்கள், பயிற்சி கட்டணம் பருவத்துக்கு ரூ.10 ஆயிரம், விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு 0422-6611229, 9442111048, 9489051046 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, விதை, உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனையாளர் சான்றிதழ் பெறுவதற்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பும் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புக்கான பயிற்சி கட்டணம் ரூ.25 ஆயிரம். தமிழ் பயிற்றுமொழியாகும். 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருந்தாலும் இந்த படிப்பில் சேரலாம். சுயதொழில், தனியார் நிறுவனங் களில் வேலைவாய்ப்பு, வங்கிகளில் கடன் உதவி, உடனடி வேலை வாய்ப்பு, பயிர் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கலாம்.

இவை தவிர 6 மாத கால சான்றிதழ் படிப்புகளும் உண்டு. அலங்காரத் தோட்டம் அமைத்தல், அங்கக வேளாண்மை, காளான் வளர்ப்பு, நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லெட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பெருக்க முறைகள், தேயிலை சாகுபடி தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு, பனை சாகுபடி தொழில்நுட்பம், மூலிகை பயிர்கள், மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள், காய்கறிவிதை உற்பத்தி, தீவன உற்பத்தி, வனவியல் தோட்ட தொழில்நுட்பம் உட்பட பல்வேறு படிப்புகள் உள்ளன.

நேர்முகப் பயிற்சி வகுப்பு மாதம் ஒரு சனிக்கிழமையில் நடைபெறும். 10-வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியை தழுவியிருந்தாலும் இதில் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.2500 ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர கல்வி முறையில் வேளாண் படிப்புகளில் சேர அழைப்பு
“மகாராஷ்டிராவில் பாலில் கலப்படம்; பெண்கள் நிதியில் ஊழல்” - பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in