‘எய்ம்ஸ்’ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு நுழைவு தேர்வில் மதுரை மாணவர் ஹரி நாராயண் முதலிடம்

‘எய்ம்ஸ்’ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு நுழைவு தேர்வில் மதுரை மாணவர் ஹரி நாராயண் முதலிடம்

Published on

மதுரை: டெல்லி எய்ம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில், மதுரை மருத்துவ மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் டெல்லி ‘எய்ம்ஸ்’, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகள் சிறப்பு பட்ட மேற்படிப்புகளுக்கு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்தும்.

இந்த ஆண்டுக்கான டெல்லி ‘எய்ம்ஸ்’ நடத்திய எம்சிஎச் (M.ch.) குடல் அறுவை சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கான படிப்பு தேர்வில் மதுரை குருவிக்காரன் சாலை பகுதியை சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் டாக்டர் ஹரி நாராயண் 100-க்கு 64 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் தேர்வாகி உள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஹரி நாராயன் கூறியதாவது: நான், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தேன். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் அறுவை சிகிச்சை முடித்துள்ளேன். அடுத்ததாக, அதில் சிறப்பு பிரிவாக குடல் அறுவை சிகிச்சைக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான நுழைவுத் தேர்வில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கத் தேர்வாகி உள்ளேன்.

மூன்றாண்டு படிப்பை முடித்த பின், மீண்டும் மதுரை வந்து தென்மாவட்ட மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவையை தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் ஹரி நாராயணன், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் சங்குமணி மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஆக இருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in