Published : 27 May 2023 04:32 AM
Last Updated : 27 May 2023 04:32 AM

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

திருச்சி: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்யும் வகையில், மாதத்தில் ஒன்று அல்லது 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள சூழலிலும், அடுத்த ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ம்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுஇருந்தது.

பல்வேறு தரப்பினர் கோரிக்கை: ஆனால், கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுதொடர்பாக, ஜப்பான் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, ஜூன் 5-ம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வர் அறிவுறுத்தல்: இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து, ஜப்பானில் உள்ள முதல்வருக்கு 2 தேதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவரது அறிவுறுத்தலின்படி, 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள சூழலிலும், அடுத்த ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது.

தவிர, இந்த விடுமுறை நீட்டிப்பை ஈடு செய்யும் வகையில், மாதத்தில் ஒன்று அல்லது 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

தனியார் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதேநேரம், இதை வெறும் அறிவிப்புடன் நிறுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். மேலும், தனியார் பள்ளிகளில் போதிய தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய உள்ளோம்.

தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தாமல், நீச்சல் உள்ளிட்ட பிற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும், விடுமுறை முடிந்துபுத்துணர்வுடன் மாணவர்கள் அடுத்த வகுப்பை படிப்பதற்கான மனநிலையை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x