சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.35 கோடியில் புதிய வகுப்பறைகள்: மேயர் பிரியா தகவல்

மேயர் பிரியா ஆய்வு
மேயர் பிரியா ஆய்வு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.35 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளி கல்வித் துறையின்கீழ் 790 பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகள் மாநகராட்சி கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளின் கட்டமைப்புகளை மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார். அதன்படி, கொட்டிவாக்கம், பெருங்குடி, நாராயணபுரம், ஜல்லடியான்பேட்டை, மயிலை பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளை மேயர் பார்வையிட்டார். அப்போது, அப்பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் மேயர் கேட்டறிந்தார்.ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் ஷரண்யா அறி, அமித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, மேயர் பிரியா கூறுகையில், "சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, சுற்றுச்சுவர், சமையல் அறை, வகுப்பறை கட்டடம் போன்றவற்றிக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். அதன்படி, ரூ.35 கோடி ரூபாய் மதிப்பில், மிகவும் சேதமடைந்துள்ள பள்ளி வகுப்பறைகள் இடித்து, புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான சீரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்துள்ளோம். அப்பணிகள், சிட்டிஸ் மற்றும் சிங்கார சென்னை 2.0 ஆகிய திட்டங்களின் வாயிலாக மறுசீரமைப்பு பணி நடைபெறும்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in