

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த குருசாமி- முனியம்மாள் தம்பதியரின் மகன் சுப்புராஜ் (27). இவர், கடந்த ஆண்டு ஐஎஃப்எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பயிற்சியில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் 621-வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்து, தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து சுப்புராஜ் கூறும்போது, “நான் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறேன்.
எனது 6-வது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். அகில இந்திய அளவில் 621-வது இடம் கிடைத்துள்ளது. ஐஏஎஸ் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. ஐபிஎஸ் பணிக்கும் சிறிதளவே வாய்ப்பு உள்ளது. ஐஆர்எஸ் பணி கிடைக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்போது உள்ள பணியை தொடர்ந்துகொண்டு மீண்டும் முயற்சிப்பதா அல்லது புதிய பணியை தேர்வு செய்வதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.