யுபிஎஸ்சி தேர்வில் தென்காசி அதிகாரி, அம்பை மாணவர் தேர்ச்சி

சுப்புராஜ், சுபாஷ் கார்த்திக்
சுப்புராஜ், சுபாஷ் கார்த்திக்
Updated on
1 min read

கோவை/ தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் சுபாஷ் கார்த்திக் (23). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் முதுகலை நானோ தொழில்நுட்ப படிப்பு படித்து வருகிறார். அதோடு யுபிஎஸ்சி தேர்வுக்கும் தயாராகி வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன் தினம் யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானதில், தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் சுபாஷ் கார்த்திக் 118-வது இடம் பிடித்துள்ளார். மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ள சுபாஷ் கார்த்திக் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வந்தேன். பயிற்சி மையம் கொடுத்த ஊக்கத்தாலும், பாடங்களை சரியான முறையில் திட்டமிட்டு படித்ததாலும் என்னால் வெற்றி பெற முடிந்தது. இந்தமுறை மொத்தம் 180 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. எனவே, என்னுடைய முதல் தேர்வாக ஐஏஎஸ் இருக்கும்” என்றார்.

ஐஎஃப்எஸ் அதிகாரி தேர்ச்சி: தென்காசி மாவட்டம் கடைய நல்லூரைச் சேர்ந்த குருசாமி- முனியம்மாள் தம்பதியரின் மகன் சுப்புராஜ் (27). இவர், கடந்த ஆண்டு ஐஎஃப்எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பயிற்சியில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் அகில இந்திய அளவில் 621-வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்து, தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து சுப்புராஜ் கூறும்போது, “நான் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறேன். எனது 6-வது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். அகில இந்திய அளவில் 621-வது இடம் கிடைத்துள்ளது.

ஐஏஎஸ் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. ஐபிஎஸ் பணிக்கும் சிறிதளவே வாய்ப்பு உள்ளது. ஐஆர்எஸ் பணி கிடைக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்போது உள்ள பணியை தொடர்ந்துகொண்டு மீண்டும் முயற்சிப்பதா அல்லது புதிய பணியை தேர்வு செய்வதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in