

சென்னை: சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரிய காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "2001ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 96 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவத்தையடுத்து, நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் வகுத்த விதிகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து தமிழக அரசு 2006ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது. கல்வி உரிமைச் சட்டத்திலும், அரசு அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவது, கட்டிட ஸ்திரத்தன்மை சான்று பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்தச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேன்சன் போன்ற குறுகிய அறைகளுடன், எந்த அங்கீகாரமும், ஒப்புதலும் இல்லாமல், காஞ்சிபுரத்தில் "விதை" பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. தாங்கள் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.
தகுதியான கட்டிட வசதி இல்லாமல், பொய் விளம்பரங்கள் மூலமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் இந்த தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை தரப்பில், "சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.