

சென்னை: மாநில கல்விக் கொள்கை குழுவை முதல்வர் தனது நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; கல்விக் கொள்கை அனைத்து தரப்பு மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். ஆனால், தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை உயர்மட்டக் குழு முழுமையாக தனது பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும், கல்வியாளர்கள், நிபுணர்களுடன் போதுமான கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை.
வருங்கால தலைமுறைக்கான கல்விக் கொள்கை வடிவமைப்பில் குழுவானது வெளிப்படைத் தன்மையுடன் சுதந்திரமாக செயல்படுவது அவசியம். எனவே, மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுவை முதல்வர் தனது நேரடி கண்காணிப்பில் வைத்து, அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையீடு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைவருக்குமான சமச்சீர் கல்வி கொள்கையை கொண்டு வந்தார். ஆனால், அதற்கு எதிராக உள்ள மாதிரி பள்ளிகளை இந்த திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மாதிரி பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாகும். எனவே, மாதிரி பள்ளி குறித்து அமைச்சரவை கூட்டி விவாதித்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணத்தை கொடுத்து மருத்துவச் சீட்டு வாங்கும் மோசமான சூழல் உள்ளது. நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அதற்கான பதில் கடிதம் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டதாக குடியரசு தலைவர் அலுவலகத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தமிழக தலைமைச் செயலகம் இதுவரை எங்களுக்கு அந்த கடி தத்தை வழங்கவில்லை.
நீட் தேர்வு சம்பந்தமான கேள்விகளை தமிழக அரசிடம் கேட்கும்போதெல்லாம் பதிலளிக்க 2 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவுக்கு, திமுக துணை போகிறதோ என சந்தேகம் எழுகிறது. இந்த விஷயத்தில் முதல்வர் களத் தில் இறங்கி பணியாற்றுவது அவ சியம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின்போது தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர்சீ.ச.ரெக்ஸ் சற்குணம், தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச் சங்கத் தலைவர் செ.அருமைநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.