

உதகை: அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க நடப்பு மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள லாரன்ஸ் பள்ளியில், அரசுபள்ளி மாணவர்களுக்கான ‘புதியன விரும்பு' கோடை பயிற்சி முகாமை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, "முதலமைச்சரின் அறிவுரைப்படி, கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் பள்ளி கல்வித் துறை சார்பில் குன்னூரில் ‘புதியன விரும்பு' பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக நீலகிரி மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
அரசு பள்ளிகளை சேர்ந்தசுமார் 70 லட்சம் மாணவர்களில், இந்த வாய்ப்பு 1,000 மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இப்பயிற்சி மூலமாக புதிய விஷயங்களை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, பல்வேறு மாற்றங்களை தங்களுக்குள் உருவாக்க உதவும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1,140 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என்பதை மனதில் நிறுத்திகொண்டு, வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும்" என்றார்.
மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில்முதலிடத்தை பிடிக்கும் மாணவர்களை வெளிநாடுகளுக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைபிடிப்பவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியில் இளம் இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி, கூடுதல் ஆட்சியர்கள்உள்ளிட்ட நபர்களால் பயிற்சிகள்அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளிடையே படிப்பு மட்டுமே என்று இல்லாமல் திறனுயர் நிகழ்வுகளான நிகழ்த்துக் கலை, இலக்கியம், செயல்பாடுகள், சமூக விழிப்புணர்வு என 15 வகையான பயிற்சிகள் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு இப்பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 1,140 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் இப்பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் கலந்துகொண்டு, 185 ஊராட்சி தொடக்கப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, ஊராட்சித் துறை சார்பில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மே மாதத்தில் மட்டும் சுமார் 80,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து, பள்ளி உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் மூலமாக மாணவ செல்வங்களுக்கு சிறந்த கல்வி கற்பிக்க செய்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் பள்ளி கல்வித்துறை காகர்லா உஷா, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர்(ஓய்வு) இரா.சுதன், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், உதகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, லாரன்ஸ் பள்ளி முதல்வர்பிரபாகரன் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.